
தித்திக்கும் திருமறையை திருநபிக்கு அருளிய
எத்திக்கும் புகழ் மணக்கும் இனிய ரமலானே வா
சங்கைமிகு லைலத்துல் கதிர் இரவைக் கைபிடித்து
ஷஅபானைப் புறந்தள்ளி சாந்தி ரமலானே நீ வா
மானுடம் செழிக்கவும் மனித நேயம் காக்கவும்
மாநிலத்தில் ஏழை படும் பசித்துயரை காட்டவே
பசித்து இறைநேசம் வேண்டி கசிந்துருகி கைகளேந்தி
விசித்து அழும் எமது பாவம் நீக்க நீயும் ஓடிவா...
இபுலிசை விலங்கிட்டு இன்னல்கள் விலகியோட
ஜன்னத்தின் தாழ் திறந்து சந்தனமணம் பரப்ப வா
சோதி முகம் காட்டி வா நிதி நிலை நாட்ட வா
நாதியற்ற எங்களுக்கு நன்மை வாரிச் சொரிய வா
நகக்குறி முகங்காட்டி அகத்திடை இருள் நீக்க
செகத்தினில் பிறப்பெடுத்து செங்கமலப் பூவிதழே வா
தூய கலிமா வழியில் துயர் நீங்கி இன்பம் பொங்க
நாயன் வழி நான் நடக்க நன்மை பயக்க வா ......
கடமை ஐந்து கணக்கிலுண்டு அதிலிரண்டு உன்னடக்கம்
மடமை போக்க நோன்பு ஜக்காத் மடியில்கட்டி நீயும் வா
கூன்பிறையே குளிர்நிலவே குவலயத்தின் மணிவிளக்கே
கண்விழித்து காத்துநின்றோம் எம் கல்பு குளிர வா....
சேனையின் செம்மை உறவுகளே
நும் அனைவருக்கும் புனித ரமலான் மாதம்
பாவக்கறை போக்கி பல்லாயிரம் நன்மைகளை
வாரி வழங்கிட வல்லவனைப் பிரார்த்திக்கிறேன்
அப்துல்லாஹ்
No comments:
Post a Comment