Thursday, August 18, 2011

முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை

துடுக்கெனெப் பேசித் துள்ளித் திரிந்தவள்
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)

அன்றொரு நாள்சொன் னேன்அன்பு மீனுவிடம்
என்றுநீ முதலிடம் பெறுகிறாயோ அன்றுநான்
நன்றாய் நயமாய் நற்றமிழ் கொண்டுனை
நூறுவரிக் கவியுடன் வாழ்த் துவேனென்று! (2)

அச்சொல் மனதில் ஆழமாய் ஏற்று
இச்சிறு பெண்ணும் இடைவிடா துழைத்து
நச்செனப் பதிவுகள் நன்றாய் இட்டு
உச்சம் எட்டி உயர்ந்தனள் இன்று (3)

இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)

பூவைச்சுற் றிவட்டமிட்டுத் தேனெடுக்கும் வண்டுபோல்
நம்மைச் சுற்றித்தே னெல்லாம்நம் மீதுகொட் டிவைத்து
நம்மை யெல்லாம்மகிழ் வித்துமகிழ்கின் றமனம்படைத்த
இம்மகள் இன்றுபெற்ற இடத்திற்கு வாழ்த்து! (5)

சுறுசுறுப்பாய் சித்தெறும்பாய் வலம்வந்து சேனையில்
விறுவிறுப்பாய் பதிவிட்டு முதலிடமும் பெற்றிட்டாள்
மறுபடியும் இன்றவள் பெற்றுவிட்ட இடத்திற்காய்
தருகின்றோம் சேனையின் மகுடமிவள் தலைமேலே (6)

இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)

நாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)

மனயிருக்கம் உள்ளவர்கள் இவளோடு பேசினால்
மனமிளகும் மருந்தாக இவள்பேசும் பேச்சுக்கள்
மறைத்துவிடும் சிலநேரம் மனக்கவலை அதனாலே
மனம்விட்டு மகிழ்ந்திட மறுபடியும் வந்திடுவர் (9)

இனிப்புண்ட சுவைபோன்றே எவரிடத்தும் பேசுகின்ற
இனிதான மீனுக்கிணை எவரேனும் உள்ளனரோ?
இன்முகத்தோ டெல்லோரின் இதயத்தைக் கவர்ந்துவிடும்
பெண்ணிவளை விரும்பாதோர் யாரேனும் இங்குண்டோ? (10)

சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும் (11)

எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து (12)

எங்கிருந்து பேசுகிறாள் என்ன அவள் செய்கின்றாள்
ஒன்றுமது அறிந்திலேன் இதுவரையில் இவள்குறித்து
இருந்தாலும் இவளையான் என்றென்றும் வாழ்த்திடுவேன்
இனிதான வாழ்விவளின் விருந்தாக வேண்டுமென்று (13)

எங்கோ இருந்துகொண்டே கவிதை போட்டியென்றால்
பங்களிப்பு செய்துவிட்டு இங்குவந்து கருசொல்வாள்
எழுதுங்கள் நான்குவரி இதைப்பற்றி எனக்கூறி
எல்லோரும் எழுதியபின் அதைத்தனதாய் ஆக்கிடுவாள் (14)

யாரென்று நானிவளை அறியுமுன் ஒருதவணை
நாராகக் கிழித்துவிட்டேன் இவள்செய்யும் இத்தவறை
பாராத முகமாயும் பட்டெனவே தவறுணர்ந்து
ஆராத தவறிழத்தேன் மீனுகுட்டி நானென்றாள் (15)

நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)

பாட்டுப்பாடி மகிழ்வித்தும் பலபதிவை ஆட்கொண்டும்
ஏட்டிக்குப் போட்டியாக பதிலளிப்பாள் மிரட்டிடுவாள்
வெட்டிக்கதை பேசினாலும் வெகுளித்தனம் உள்ளிருக்கும்
குட்டிமீண் போல்நமது சேனையிலே மிளிர்கின்றாள் (17)

மீனுயென்னும் பெயருடனே சுற்றிவரும் செல்லக்குட்டி
மனங்கவர்ந்து சுகங்கொடுக்கும் சுத்தமான தங்கக்கட்டி
செந்தமிழர் மனத்தினை கொள்ளைகொள்ள ஓடிவந்து
சேனையிலே ஒட்டிக்கொண்ட சின்னஞ்சிறு வெல்லக்கட்டி (18)

சலசலவென அடிக்கும் காற்றுபோல சுகம்கொடுத்து
கலகலவென சிரிப்பினையும் பேச்சுடனே சேர்த்துவைத்து
படபடவென ஒலிக்குமொலி யாகயிவள் பலதிசையும்
சுடச்சுடவென மின்னிமின்னி சிரிப்புடனே சுழலுகிறாள் (19)

செல்லப்பெண் இவளுடனே சேர்ந்தேதான் தென்றலுமே
எல்லோரின் மனங்களையும் இதமாகவ ருடிடுமேயிவள்
இல்லாத நேரமெலாம் இலையுதிர் காலம்போலே
பொல்லாத வெறுமாயாலே பொலிவின்றி இருந்திடுமே (20)

இவளோடு சாதிக்கும் சளைக்காமல் சண்டையிட
இவள்தன்றன் அண்ணனான சம்ஸ்விடம் முறையிட
நண்பன்முதல் முனாஸ் வரைதுணையாக வரவழைத்து
அரங்கேற்றும் அரட்டையெல்லாம் கண்கொள்ளா காட்சியம்மா (21)

காட்டினிலே பூக்கின்ற கானகத்துப் பூவெல்லாம்
வீட்டினிலே பூக்கின்ற விலையில்லாப் பூவெல்லாம்
மீட்டிவரும் ராகத்தோடு சேர்த்துவைத்து கொடுக்கின்றோம்
சேனையுலா வருகின்ற தமிழரெலாம் சேர்ந்தின்று (22)

கலைநிலா கொடுக்கின்ற கவிதையெனும் வாழ்த்துடனும்
சுலைமானும் சம்ஸ்சுடனே றிமாசும் சாதிக்கும்
ஹம்னாவும் நண்பனும் பாறூக்கும் பாயிஸும்
மற்றெல்லாம் சேர்ந்து மனமொன்றி வாழ்த்துகிறோம்! (23)

செல்லப்பெண் ணின்சில்மிஷங் கள்இன்று போலென்றுமே
சேனையிலே சுற்றிவர சேர்ந்தஉறவு அத்தனையும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்து இவ்வினிய வேளையிலே
ஒர்குரலில் வாழ்த்துவோம் குறைவின்றி வாழவே !

அன்புடனே வாழ்த்துகிறோம் அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என்றென்றும் உயர்வான வாழ்வுடனே வாழ்ந்திடவே
எம்சேனை உறவுகள் எல்லோரும் வாழ்த்துகிறோம்
வாழ்கவாழ்க வாழ்கென வளமுடன்நலமுடன் வாழ்கெனெ! (24)


அன்புடன்
யாதுமானவள்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...