Thursday, August 18, 2011

முதலிடம் பிடித்த மீனுவுக்கு வாழ்த்து - 100 வரிக்கவிதை

துடுக்கெனெப் பேசித் துள்ளித் திரிந்தவள்
மிடுக்கியாய் அனைவர் மனத்திலும் அமர்ந்தவள்
சடுதியில் பதிவுகள் பலப்பல இட்டிவள்
பிடித்தனள் முதலா மிடம்நம் சேனையில் (1)

அன்றொரு நாள்சொன் னேன்அன்பு மீனுவிடம்
என்றுநீ முதலிடம் பெறுகிறாயோ அன்றுநான்
நன்றாய் நயமாய் நற்றமிழ் கொண்டுனை
நூறுவரிக் கவியுடன் வாழ்த் துவேனென்று! (2)

அச்சொல் மனதில் ஆழமாய் ஏற்று
இச்சிறு பெண்ணும் இடைவிடா துழைத்து
நச்செனப் பதிவுகள் நன்றாய் இட்டு
உச்சம் எட்டி உயர்ந்தனள் இன்று (3)

இரவெல்லாம் கண்விழித்துத் தனியா யமர்ந்து
இவளிட்ட பதிவிற்கென் இதமான வாழ்த்து!
இணையத்தில் இணைந்துநம் இதயத்தில் அமர்ந்துவிட்ட
இனிதான பெண்ணிற்கென் கனிவான வாழ்த்து! (4)

பூவைச்சுற் றிவட்டமிட்டுத் தேனெடுக்கும் வண்டுபோல்
நம்மைச் சுற்றித்தே னெல்லாம்நம் மீதுகொட் டிவைத்து
நம்மை யெல்லாம்மகிழ் வித்துமகிழ்கின் றமனம்படைத்த
இம்மகள் இன்றுபெற்ற இடத்திற்கு வாழ்த்து! (5)

சுறுசுறுப்பாய் சித்தெறும்பாய் வலம்வந்து சேனையில்
விறுவிறுப்பாய் பதிவிட்டு முதலிடமும் பெற்றிட்டாள்
மறுபடியும் இன்றவள் பெற்றுவிட்ட இடத்திற்காய்
தருகின்றோம் சேனையின் மகுடமிவள் தலைமேலே (6)

இளைப்பாற வருவோரை இவள்பேச்சா லிழுத்திடுவாள்
களைப்புடனே வருவோரை களங்கமற்ற சொற்களினால்
களிப்பினில் முகிழ்த்திடுவாள் கற்கண்டாய் இனித்திடுவாள்
எளிதாக எல்லோரின் மனநிலையை மாற்றிடுவாள் (7)

நாலுபக்கம் பரந்திருக்கும் நற்றமிழர் மனங்களிலே
வாலுப்பெண் இவள்மட்டும் ஓடியோடி வலம்வந்து
வரவேற்பும் வாழ்த்தும் வேண்டுமென அடம்பிடிப்பாள்
வாழ்த்தினை அனைவரையும் வதைத்தேனும் பெற்றிடுவாள் (8)

மனயிருக்கம் உள்ளவர்கள் இவளோடு பேசினால்
மனமிளகும் மருந்தாக இவள்பேசும் பேச்சுக்கள்
மறைத்துவிடும் சிலநேரம் மனக்கவலை அதனாலே
மனம்விட்டு மகிழ்ந்திட மறுபடியும் வந்திடுவர் (9)

இனிப்புண்ட சுவைபோன்றே எவரிடத்தும் பேசுகின்ற
இனிதான மீனுக்கிணை எவரேனும் உள்ளனரோ?
இன்முகத்தோ டெல்லோரின் இதயத்தைக் கவர்ந்துவிடும்
பெண்ணிவளை விரும்பாதோர் யாரேனும் இங்குண்டோ? (10)

சிலநேரம் இவள்பேச்சும் சிறுபிள்ளை மழலைபோல்
சிலநேரம் இவளாட்டாம் சிறுபிள்ளை மகிழ்வுபோல்
சிலநேரம் இவள்பதில்கள் பெரியவரின் தோரணையில்
சிலநேரம் இவளென்ன என்பதுபோல் கேள்வியெழும் (11)

எப்படித்தான் தோற்றங்கள் மாற்றினாலும் உள்மனதில்
அப்படியே இன்னுமந்தக் குழந்தைத்தனம் மிளிர்கிறது
இப்படியே எப்போதும் மகிழ்வுடனே இவளிருக்க
எப்போதும் வாழ்த்துகிறேன் தமிழாலே கவிவடித்து (12)

எங்கிருந்து பேசுகிறாள் என்ன அவள் செய்கின்றாள்
ஒன்றுமது அறிந்திலேன் இதுவரையில் இவள்குறித்து
இருந்தாலும் இவளையான் என்றென்றும் வாழ்த்திடுவேன்
இனிதான வாழ்விவளின் விருந்தாக வேண்டுமென்று (13)

எங்கோ இருந்துகொண்டே கவிதை போட்டியென்றால்
பங்களிப்பு செய்துவிட்டு இங்குவந்து கருசொல்வாள்
எழுதுங்கள் நான்குவரி இதைப்பற்றி எனக்கூறி
எல்லோரும் எழுதியபின் அதைத்தனதாய் ஆக்கிடுவாள் (14)

யாரென்று நானிவளை அறியுமுன் ஒருதவணை
நாராகக் கிழித்துவிட்டேன் இவள்செய்யும் இத்தவறை
பாராத முகமாயும் பட்டெனவே தவறுணர்ந்து
ஆராத தவறிழத்தேன் மீனுகுட்டி நானென்றாள் (15)

நட்பென்ற உறவாலே இணைந்துவிட்ட உறவிற்கு
சுட்டிப்பெண் இவளென்றால் சொந்தமெல்லாம் அப்புறந்தான்
பட்டுப் பெண் இவளன்றோ சேனையின் செல்லப்பெண்
விட்டிடாது இவள் உறவை சேனையுந்தான் என்றென்றும் (16)

பாட்டுப்பாடி மகிழ்வித்தும் பலபதிவை ஆட்கொண்டும்
ஏட்டிக்குப் போட்டியாக பதிலளிப்பாள் மிரட்டிடுவாள்
வெட்டிக்கதை பேசினாலும் வெகுளித்தனம் உள்ளிருக்கும்
குட்டிமீண் போல்நமது சேனையிலே மிளிர்கின்றாள் (17)

மீனுயென்னும் பெயருடனே சுற்றிவரும் செல்லக்குட்டி
மனங்கவர்ந்து சுகங்கொடுக்கும் சுத்தமான தங்கக்கட்டி
செந்தமிழர் மனத்தினை கொள்ளைகொள்ள ஓடிவந்து
சேனையிலே ஒட்டிக்கொண்ட சின்னஞ்சிறு வெல்லக்கட்டி (18)

சலசலவென அடிக்கும் காற்றுபோல சுகம்கொடுத்து
கலகலவென சிரிப்பினையும் பேச்சுடனே சேர்த்துவைத்து
படபடவென ஒலிக்குமொலி யாகயிவள் பலதிசையும்
சுடச்சுடவென மின்னிமின்னி சிரிப்புடனே சுழலுகிறாள் (19)

செல்லப்பெண் இவளுடனே சேர்ந்தேதான் தென்றலுமே
எல்லோரின் மனங்களையும் இதமாகவ ருடிடுமேயிவள்
இல்லாத நேரமெலாம் இலையுதிர் காலம்போலே
பொல்லாத வெறுமாயாலே பொலிவின்றி இருந்திடுமே (20)

இவளோடு சாதிக்கும் சளைக்காமல் சண்டையிட
இவள்தன்றன் அண்ணனான சம்ஸ்விடம் முறையிட
நண்பன்முதல் முனாஸ் வரைதுணையாக வரவழைத்து
அரங்கேற்றும் அரட்டையெல்லாம் கண்கொள்ளா காட்சியம்மா (21)

காட்டினிலே பூக்கின்ற கானகத்துப் பூவெல்லாம்
வீட்டினிலே பூக்கின்ற விலையில்லாப் பூவெல்லாம்
மீட்டிவரும் ராகத்தோடு சேர்த்துவைத்து கொடுக்கின்றோம்
சேனையுலா வருகின்ற தமிழரெலாம் சேர்ந்தின்று (22)

கலைநிலா கொடுக்கின்ற கவிதையெனும் வாழ்த்துடனும்
சுலைமானும் சம்ஸ்சுடனே றிமாசும் சாதிக்கும்
ஹம்னாவும் நண்பனும் பாறூக்கும் பாயிஸும்
மற்றெல்லாம் சேர்ந்து மனமொன்றி வாழ்த்துகிறோம்! (23)

செல்லப்பெண் ணின்சில்மிஷங் கள்இன்று போலென்றுமே
சேனையிலே சுற்றிவர சேர்ந்தஉறவு அத்தனையும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்து இவ்வினிய வேளையிலே
ஒர்குரலில் வாழ்த்துவோம் குறைவின்றி வாழவே !

அன்புடனே வாழ்த்துகிறோம் அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என்றென்றும் உயர்வான வாழ்வுடனே வாழ்ந்திடவே
எம்சேனை உறவுகள் எல்லோரும் வாழ்த்துகிறோம்
வாழ்கவாழ்க வாழ்கென வளமுடன்நலமுடன் வாழ்கெனெ! (24)


அன்புடன்
யாதுமானவள்

Thursday, July 28, 2011

புண்ணியம் சூல்கொண்ட நிலவு..


தித்திக்கும் திருமறையை திருநபிக்கு அருளிய
எத்திக்கும் புகழ் மணக்கும் இனிய ரமலானே வா
சங்கைமிகு லைலத்துல் கதிர் இரவைக் கைபிடித்து
ஷஅபானைப் புறந்தள்ளி சாந்தி ரமலானே நீ வா

மானுடம் செழிக்கவும் மனித நேயம் காக்கவும்
மாநிலத்தில் ஏழை படும் பசித்துயரை காட்டவே
பசித்து இறைநேசம் வேண்டி கசிந்துருகி கைகளேந்தி
விசித்து அழும் எமது பாவம் நீக்க நீயும் ஓடிவா...

இபுலிசை விலங்கிட்டு இன்னல்கள் விலகியோட
ஜன்னத்தின் தாழ் திறந்து சந்தனமணம் பரப்ப வா
சோதி முகம் காட்டி வா நிதி நிலை நாட்ட வா
நாதியற்ற எங்களுக்கு நன்மை வாரிச் சொரிய வா

நகக்குறி முகங்காட்டி அகத்திடை இருள் நீக்க
செகத்தினில் பிறப்பெடுத்து செங்கமலப் பூவிதழே வா
தூய கலிமா வழியில் துயர் நீங்கி இன்பம் பொங்க
நாயன் வழி நான் நடக்க நன்மை பயக்க வா ......

கடமை ஐந்து கணக்கிலுண்டு அதிலிரண்டு உன்னடக்கம்
மடமை போக்க நோன்பு ஜக்காத் மடியில்கட்டி நீயும் வா
கூன்பிறையே குளிர்நிலவே குவலயத்தின் மணிவிளக்கே
கண்விழித்து காத்துநின்றோம் எம் கல்பு குளிர வா....

சேனையின் செம்மை உறவுகளே
நும் அனைவருக்கும் புனித ரமலான் மாதம்
பாவக்கறை போக்கி பல்லாயிரம் நன்மைகளை
வாரி வழங்கிட வல்லவனைப் பிரார்த்திக்கிறேன்

அப்துல்லாஹ்

Sunday, July 17, 2011

பாராட்டும் அதனோடு சிறு பரிசுமாக இந்தக் கவிதையும் உமக்கே!

பாதித்த பக்கங்கள் அத்தனையும் பிய்த்துதறி
சாதிக்க வேண்டுமென்று எண்ணமொன்றே கொண்டு
சாதிக்காய் மாறிபுது வேடமது பூண்டு - அவர்க்கு
போதிக்கும் முறைகண்டு வியக்கின்றேன் யான்!

முத்துப்போல் பதிவுகளை முனைப்பாக இட்டுதினம்
எத்திவிட்ட ஆயிரங்கள் பதினெட்டான இந்நந்நாளில்
நாதிக்காமல் அனைவரையும் வாழ்த்திடும் உனையென்
நாதித்திக்க தித்திக்க வாழ்த்துகிறேன் மகிழ்ந்து!

உறங்காத சிந்தனைகள் ஒருகோடி சேர்த்து
சிறந்திடுவாய் சிறப்பான கோடிகவி யாத்து
உயர்வான இன்னும்பல உயரங்கள் தொடவே
பிறர்போல வாழ்த்திடுவேன் அன்புடனே தினமே!

சேனைக்கு நீசெய்யும் சேவையினைக் கண்டுநான்
வாயடைத்துப் போகின்றேன் வார்த்தையிலை சொல்ல
வானைப்போல் சேனையது உயர்ந்துபுகழ் கொள்ள
வாய்திறந்து வாழ்த்துகிறேன் வாடிடாது வளர்க்க!


அன்புடன்,
யாதுமானவள்

Saturday, July 16, 2011

சம்ஸ்! மூன்று எழுத்தின் தாரக மந்திரம்!

சம்ஸ்!
மூன்று எழுத்தின் தாரக
மந்திரம்!

சேனையோடு உலாவ,
இணையத்தில் ,இதயத்தை
இணைத்த சூத்திரதாரி!

உன் உழைப்பை சொல்லி ,
உன் பிம்பம் பதித்தே
வந்தது உன் படைப்புகள்!

இருபத்திரண்டு என்று
இறுமாப்புக் கொள்ளாமல்,
இணையத்தில் சிரித்ததது!

இதயங்கள் எல்லாம்
இணைக்க உன் படைப்புக்கள்
தூது சொன்னது!துணைப் போனது!

கழித்த நிமிடங்களை,
ரசனைக்குள் இணைத்து,
சேனைக்குள் சோலையாக்கியது!

இது தொடக்கமே.
இனி தொடருவது எல்லாம்,
இதையத்தை இணைக்குமே!

நேற்றும் சொன்னது,
இன்றும் சொல்கிறது,
நாளையும் சொல்லும்....

சேனைக்குள் அழைத்து .
இணையத்தில் ,இதையத்தை
இணைத்த வித்தகன் நீ என்று!

இன்னும் தொடரட்டும்
இணையத்தில் உன் போராட்டம்,
இனிய வெற்றி தேரோட்டம்,

சேனையின் சிங்கத்தமிழன், சகோதரன் சம்சுதீன் இன்னும் பலப்பல சாதனைகள் பெறவேண்டி தமிழ்ச் சகோதரி யாதுமானவள் என்ற லதாராணி மிக்க அன்புடனும் அக்கறையுடனும் வாழ்த்துகிறேன்.


சேனையின் சிங்கத்தமிழன், சகோதரன் சம்சுதீன் இன்னும் பலப்பல சாதனைகள் பெறவேண்டி தமிழ்ச் சகோதரி யாதுமானவள் என்ற லதாராணி மிக்க அன்புடனும் அக்கறையுடனும் வாழ்த்துகிறேன்.

22000 பதிவுகள் இட்டு தன் உயர்ந்த குறிக்கோளினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வைராக்கிய தமிழனுக்கு ஒரு வாழ்த்துப்பா....

இக்கரை அக்கரை எக்கரை தேடினுமுன்
அக்கறை யாலமைந்த சேனை போலாகுமா?
தக்கவர் துணையுடன் தமிழனின் பெருமையை
பக்கங்கள் தவறாது படித்திடப் பதிக்கிறாய்

நற்றமிழ்ச் சேனையை நற்பாதையில் வளைக்கிறாய்
மற்றவர் வியந்திட மிடுக்குடன் வளர்க்கிறாய்
உற்றஉன் வேகத்தால் உயர்ந்து நீநிற்பதை
குற்றமுள்ள நெஞ்சினோர் குமுறியே காண்கிறார்

காலத்தே ஆங்கே கொண்ட வோர் முற்றம்
ஞாலத்துத் தமிழரை இணைப்பதாய்க் கணைத்து
ஆலம் போல் கக்கிய விஷத்தைச் செரித்துன்
கோலத்தை இங்கே கூட்டினாய் அழகாக

தொழுநோய்க் கிருமிகள் தொலைத்திங்கு தனியாக
எழுச்சியாய் எழுதமிழ் படைப்பவருன் துணையாக
பழமுதிர்ச் சோலையாய் சேனையும் மாறிட
புழுங்கியே நோகின்றார் பகைவரும் இன்று!

வஞ்சகம் பேசுபவர் வார்த்தைகள் சுட்டிட
நெஞ்சினில் தழும்புகள் இன்னமும் நிலைத்திட
கொஞ்சமும் குன்றாது குறிக்கோளைக் கொண்டதால்
விஞ்சிதான் நிற்கிறது உன்வியத்தகு சாதனை!

இன்னுமின்னும் பதிவுகள் இட்டவாறு சென்றிட
மின்னி மின்னி நகைத்து நற்பாதையில் சென்றிட
இன்றுபோ லென்றுமே எழுச்சியோ டியங்கிட
பன்னிறப் பூக்களைத் தூவியாம் வாழ்த்தினோம் !

அன்புடன்,
யாதுமானவள் (எ) லதாராணி





Sunday, July 10, 2011

சேனைக்கு வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் பல்லாயிரம் !

பைந்தமிழ் ஆர்வம் கொண்டு பாரெலாம் வாழு கின்ற
இன்தமிழ் மக்களுக் கினிதான நற்சேவை செய்ய
செந்தமிழ்க் காதல் கொண்டு செருக்குடன் வலம் வந்து
எந்தமிழ்ச் சேனை வலையில் வந்ததே முதலாய் இன்று

மற்றையோர் இங்குவந்து மகிழ்வுடன் - தாங்கள்
கற்றதும் கொடுத்து சிலகற்கவும் வேண்டுமாறு
பற்பல பதிவு தன்னை பகிர்ந்திட வழியும்செய்து
உற்றதாய் வலையில் உலவியே வளர்ந்த தின்று

நஞ்சினும் கொடியதாக நன்னெறி அற்ற சிலபேர்
வஞ்சனை செய்து தமிழ் வளர்ப்பதாய்க் கூறிக் கொண்டு
நெஞ்சிலே பொய்நிறை நித்தமும் சூடிக் கொண்டு
வஞ்சமாய் வாழுகின்றார் வலைத்தளம் தன்னில்இங்கு.

அங்ஙனம் இன்றி தமிழுக் கருமையாய் தொண்டு செய்ய
இங்கொரு சேனை ஒன்று இயல்புடன் தன்கை கோர்த்து
தங்களின் உறவாகத் தமிழனின் தோழனாகச சேனையின்
அங்கமாய் அத்தனை பேரும் ஆர்வமாய் உழைத்ததாலே

உறவுகள் பெருமை கொள்ள உயர்வினை கண்ட தின்று
ஏளனம் எல்லாம் தின்று எட்டியது உயர்வினை இன்று
சிறகுகள் இன்றி வானில் சிலிர்த்தினி பறக்க வேண்டி
உறவுகள் அனைவரையும் உவந்து நான் வாழ்த்து கின்றேன் !

அன்புடன்,
யாதுமானவள்
Related Posts Plugin for WordPress, Blogger...